செடிக்காக... பொழிந்த மழைத்துளிகள்...

Posted by manager on September 3, 2012

கடந்த பதிவில் இடம்பெற்றிருந்த மாரிச்செல்வத்தின் சாதனைக் கதையை படித்துவிட்டு எம்மை தொடர்பு கொண்ட நல்உள்ளங்கள் எராளம் மாரிச்செல்வதின் படிபிற்கு உதவ வேண்டும் அவனது மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும் என்று முன்வந்த அத்துனை நல்உள்ளங்களுக்கும் எங்கள் வலைப்பூவின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.


மாரிச்செல்வத்தின் இந்த சாதனை இன்று பத்திரிகை மற்றும் வார இதழ்களில் வருகின்றது என்றால் இந்த வலைத்தளத்தை படித்த ஆயிரக்கனக்கான வாசகர்களும் தமது வலைப்பதிவில் பதிவு செய்த பதிவாளர்களும் இதை அவர்களுக்கு அறிமுகப் படுத்திய கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி அவர்களையுமே சாரும். இந்த அறிமுகம் இன்று அந்த மாணவனின் கல்விக்கும் அவன் மருத்துவ செலவுக்கும் உதவுவுகின்றது என்றால் அதில் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.


இந்த பதிவினை ஏற்றிய பின்பு அதனை மாரிசெல்வதுக்கு காட்டுவதற்காக அவனது வீடு இருக்கும் மூக்கயூர் கிராமத்துக்கு சென்றேன் அங்கு அவன் வீட்டுக்கு கூட்டிச் சென்ற நபர் அந்த ஊரின் கடைக்கோடியில் ஒரு காட்டுக்குள் அழைத்துச் செல்ல உண்மையில் மாரியின் வீட்டுக்குதான் அழைத்து செல்கின்றீர்களா? என்ற சந்தேகத்தை எழுப்பினேன். எதுவும் பதில் சொல்லாமல் அழைத்து சென்ற அவர் ஒரு பனை விடிலி போல் இருக்கும் ஒரு குடிசையை காட்டி இதுதான் மாரியின் வீடு என்ற போது எனது எதிர்பார்ப்பு எத்தகையது என்பதை உங்களால் உணர முடிந்திருக்கும்.


என்னைப் பார்த்ததும் வீட்டுக்குள் சென்று அம்மாவை அழைத்து வந்த மாரிச்செல்வம் என்னை உட்காரச் சொல்ல எதுவும் இல்லாமல் சங்கடப் படுவதைப் பார்த்து எதுவும் கூற முடியாமல் நின்ற எனக்கு மாரிச்செல்வம் பற்றி இன்னும் முளுதாய் எழுத வில்லை என்ற குற்றவுணர்வு சுடத்தான் செய்தது.அவனுடனும் அவனது அம்மா மற்றும் அக்காவிடமும் உரையாடிய பின்பு மாரியின் எதிர்கால படிப்பு மற்றும் அவனது உடல்நிலை பற்றி விசாரித்த பின்பு அவன் சாதனையை பதிவில் ஏற்றியதையும் அதற்கு வாசகர்கள் அளித்த பதில்களையும் கூறி அவன் படிப்புக்கும் மருத்துவத்திற்கும் உதவுவதற்கு பலர் முன்வந்திருப்பதை கூறினேன்.


கண்ணீரோடு நன்றி கூறிய அவனது அம்மா இதையெல்லாம் கேட்பதற்கு அவன் அப்பாவும், அக்காவும் இல்லாம போயிட்டாங்களே... என்று கூறிய போது என்னாலும் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை.இந்த கிராமத்துக்கும் இந்த மக்களுக்கும் பணிபுரியும் நிறுவனத்திற்கும் நான் புதியவன். மதுரையில் சமுகபணி படிப்பை முடித்து கொண்டு தற்போதுதான் நிறுவனத்தில் இணைந்துள்ளேன். மாரியின் கதை எனது பணியில் நான் எழுதிய முதல் பதிவு . அது இன்று தமிழகம் தாண்டி தமிழர்கள் வாழும் இடம் எல்லாம் சென்றதென்றால் அதில் இருக்கும் அவனது வாழ்க்கை பின்னனியும் அவன் சோதனை கலந்த சாதனையுமே காரணம்.


கடந்த 25.06.2011அன்று வெளிவந்த தினமலர் பத்திரிகை மாரியின் சாதனை கதையை பிரசுரித்திருந்தது.குமுதம் வார இதழில் இருந்து மாரியை நேர்கண்டனர். ஒரு புகழ்வாய்ந்த பள்ளியில் இருந்து மாரியை தாம் படிக்க வைப்பதாகவும் அவனை மருத்துவராக்க ஆசைப்படுவதாகவும் கூறியது. இதையெல்லாம் மாரியிடம் கூறினால் அவன் எப்படி சந்தோசப்படுகிறான் என்பதை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் இதை கூறிய போது மாரியின் முகத்தில் பெரிதாய் ஒன்றும் மாற்றத்தை நான் கண்டுவிடவில்லை. அவனது அம்மா சந்தோசமடைந்து என்ன மாரி நீ படிக்க போகிறாயா? என கேட்க மாரி இல்லை என்றதும் எனக்கு சங்கடமாகித்தான் போனது.இருந்த போதும் அதற்காக அவன் சொன்ன காரணங்கள் உண்மையில் நான் சிந்தித்து பார்க்காத பக்கங்களாகவே இருந்தது.


மாரி தனது படிப்பை அதே பள்ளியில் தொடர இருப்பதாகவும் அவன் அம்மா எப்போதுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் தன்னுடன் SSLC எழுதிய தனது அக்காவின் மகள், மற்றும் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு தான் படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என்று கூறும் அவன் நியாயமான ஆசைகளை தட்டிக்களிக்க முடியவில்லை. அதனால் அவனது படிப்பிற்கு நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி செய்ய முன்வந்தவர்களுக்கு மட்டும் அவனது தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தேன்.


அத்தனையும் முடித்துவிட்டு மாலை 6.30 மணி அவன் வீட்டில் இரு்ந்து சீமைகருவேலைக் காட்டு வழியாக நடந்து வந்துகொண்டிருந்தேன். அவன் வெளியிடத்தில் படிக்க வந்த வாய்ப்பை தவற விட்டானோ.... என என் மனம்... கேட்ட கேள்விக்கு அவன் இருப்பிடமே பதில்களை தந்தது. சுற்றிலும் பனங்காடு...வானம் பார்த்த பூமி என இருக்கும் நிலத்தில் பி்றந்த அவனுக்கு தோட்டத்து நிலம் போல நீர் இறைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை அவனை சுற்றி இருக்கும் களைகளை பிடுங்கிவிட்டால் அந்த நிலத்ற்கேற்ற வீரியத்துடன் விருட்சமாய் வளர்வான் என்ற நம்பிக்கை அங்கேயே பிறந்தது.


அந்த மண்ணின் செடியை ஏன் இடம் மாற்ற வேண்டும் அதனை அங்கேயே நீரூற்றி உரம் போட்டு வளர்ப்போம். அந்த செடிக்காக பெய்யும் மழைத்துளிகளில் அந்த நிலமும் வளர்ச்சி பெறட்டும். உங்களால் முடியும் எனின் இது போன்று முளைவிட்டு வளரமுடியாத வானம் பார்த்த செடிகளாய் எம்மிடம் பல குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் மீதும் உங்கள் கருணை மழை பொழியட்டுமே....

நன்றியுடன்.... பதிவாளன்: ஸ்ரீதரன்..